அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி! பெண் உள்பட 3 பேர் பலி; 8 பேர் காயம்... பகீர் சிசிடிவி காட்சிகள்!
ஒடிசா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரி, கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர்.
அடுத்தடுத்து மோதிய லாரி
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சாமகண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகனங்கள் வரிசையாகச் சென்று கொண்டிருந்தன. சில வாகனங்கள் சாலையைக் கடப்பதற்காக மெதுவாகச் சென்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி முன்னால் சென்ற கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. இதில், வாகனங்களில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 10 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பொதுமக்கள் சாலை மறியல்
இந்த விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
