லஞ்சப் பணத்துடன் குளத்தில் குதித்த போலீஸ் எஸ்.ஐ ... அதிர்ச்சி வீடியோ!

 
ஒடிசா

 

ஒடிசாவில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்கக் குளத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை அதிகாரிகள் நீந்திச் சென்று பிடித்தனர்.

சம்பல்பூர் மாவட்டம் மஹுல்பலி காவல் நிலையத்தில் சுஜித் குமார் மஹந்தா என்ற எஸ்.ஐ. பணியாற்றி வந்தார். காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வழக்கை முடித்து வைப்பதற்காக, புகார்தாரரிடம் அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரைப் பிடிக்கத் திட்டமிட்டனர்.

இதற்காக, காவல் நிலையத்திற்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு எஸ்.ஐ. புகார்தாரரை அழைத்துள்ளார். அங்கு அவர் பணத்தைப் பெற்றபோது மறைந்திருந்த அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். இதைக் கண்ட எஸ்.ஐ. அங்கிருந்து தப்பியோடி அருகிலிருந்த குளத்தில் குதித்தார். அவரைப் பின்தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் குளத்தில் இறங்கி நீந்திச் சென்று அவரைப் பிடித்தனர்.

இதையடுத்து, அவரிடம் இருந்து லஞ்சப் பணம் ரூ.10 ஆயிரம் மீட்கப்பட்டது. மேலும், காவல் நிலைய வளாகத்தில் உள்ள அவரது ஓய்வறையில் நடத்தப்பட்ட சோதனையில் கூடுதலாக ரூ.1,55,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.