சர்வதேச சர்ச்சைக்குள் சிக்கிய ஒடிஸி நடிகை... 3,000 வருஷ பழமையான ஈரானிய நகைகள்?!

 
ஒடிஸி ஹாலிவுட் நடிகை ஜெண்டயா

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி ஒடிஸி' திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், ஹாலிவுட்டின் முன்னணி நடிகை ஜெண்டயா பங்கேற்றார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடை, அலங்காரம் உலகளவில் கவனத்தைப் பெற்றது. ஆனால், அவர் உடுத்தியிருந்த வெள்ளை நிற உடைக்கு இணையாக, அவர் காதுகளில் அணிந்திருந்த ஒரு பழங்கால ஈரானிய தங்கக் காதணி தான் தற்போது சர்வதேச அளவில் மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரானிய தங்கப் பதக்கங்களால்  செய்யப்பட்ட காதணிகளை அவர் அணிந்திருந்ததே இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஜெண்டயா அணிந்திருந்த இந்த தங்கத் தகடுகள் கி.மு. முதலாம் ஆயிரமாண்டு காலத்தைச் சேர்ந்தவை.

1940-களின் பிற்பகுதியில் வடமேற்கு ஈரானின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஜிவியே கிராமத்திற்கு அருகில் ஒரு வெண்கலப் பெட்டகத்திற்குள் இந்தப் பழங்காலத் தங்கப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தொல்பொருள் ஆய்வாளர்களின் மேற்பார்வையின்றித் தன்னிச்சையாகக் கண்டெடுக்கப்பட்டதால், இந்தப் புதையலின் பல பகுதிகள் சிதைக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு தனியார் மற்றும் பொதுச் சேகரிப்பாளர்களுக்கு விற்கப்பட்டன.

இந்தத் தங்கப் பதக்கங்களில் பழங்கால அசிரிய நாகரிகத்தில் நீதியையும், தெய்வீகப் பாதுகாப்பையும் குறிக்கும் 'சூரியக் கடவுள்' ஷாமாஷின் கதிர்வீசும் சூரியக் குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வரலாற்றுத் தகடுகளை லண்டனைச் சேர்ந்த பழங்கால நகைக் டீலர்கள் மூலம் பெற்று, நவீன வைரங்கள் மற்றும் 18 கேரட் தங்கக் கம்பிகளால் பிணைத்து இந்த சொகுசுக் காதணி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெண்டயாவின் இந்த ரெட் கார்பெட் லுக் இணையத்தில் வெளியான அடுத்த நிமிடமே, ஃபேஷன் விமர்சகர்களை விடவும் உலகெங்கிலும் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களும் தங்களின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க, ஒரு நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் இத்தகைய அரிய கலைப்பொருட்கள் அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டுமே தவிர, பிரபலங்கள் தங்களின் ஃபேஷன் தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், ஈரானியப் பகுதிகளிலிருந்து முறையற்ற வகையில் கொண்டு வரப்பட்ட வரலாற்றுப் பொருட்களை மேற்கத்தியப் பிரபலங்கள் அணிவது, ஒரு கலாச்சாரம் மற்றொரு கலாச்சாரத்தின் பாரம்பரியத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, இந்த நகையை வடிவமைத்து விற்ற லண்டனைச் சேர்ந்த நிறுவனம் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

அதில், "இந்தத் தங்கத் தகடுகள் மிகவும் எளிய, அசல் கலைப்பொருளுக்கு எந்தவிதச் சேதமும் விளைவிக்காத பிடிமானங்கள் மூலமே காதணியாக மாற்றப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், தற்போதைய சமகாலச் சூழலில் ஈரான் நாட்டின் கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தின் நீடித்த புகழை உலகுக்கு நினைவூட்டும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்பட வேண்டும் என்றும், கலாச்சாரப் பாதுகாப்பு குறித்த விவாதங்களை தாங்கள் வரவேற்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.