அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. 17 வருடங்களுக்குப் பிறகு மதுரை சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
கும்பாபிஷேகம் நடைபெற்று 17 வருடங்கள் ஆகும் நிலையில், உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் இந்த வருடம் செப்டம்பர் 17ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 17 ம் தேதி (ஆவணி 31) காலை 7.45 மணி முதல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடைசியாக கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை (அதாவது 2021-ல்) நடத்தப்பட வேண்டிய இந்த விழா, 2018-ல் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகத் தள்ளிப்போனது.
தீ விபத்தில் சேதமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மண்டபத்தை, அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.35.30 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் திருப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதி என மொத்தம் ரூ.32.28 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட 186 வகையான திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மார்ச் மாதமே பணிகள் முடிந்தாலும், சித்திரைத் திருவிழா உள்ளிட்ட அடுத்தடுத்த முக்கியத் திருவிழாக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ஆகம வல்லுநர்களின் ஆலோசனைப்படியும் செப்டம்பர் 17-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
