அதிகாரப்பூர்வ அறிவிப்பு... 2028 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
சர்வதேச விளையாட்டு அரங்கில் மிகப்பெரிய வரலாற்றுத் திருப்பமாக, 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டிற்கு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேரடியாகத் தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை இணைந்து இதற்கான அதிகாரப்பூர்வ தகுதிச் சுற்று விதிகளை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா 6 அணிகள் மட்டுமே டி20 வடிவிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியும். இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் முடிவுகளின் அடிப்படையிலேயே ஒலிம்பிக் தகுதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இத்தொடரில் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறத் தவறினாலும், லீக் சுற்றுகளின் புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் அடிப்படையில், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இதர அணிகளான இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானை விடப் புள்ளிகள் பட்டியலில் முன்னிலை பெற்றது.

இதன்படி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய 4 கண்டங்களில் இருந்து மிகச் சிறந்த இடங்களைப் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் கிரேட் பிரிட்டன் (இங்கிலாந்து) ஆகிய 4 மகளிர் அணிகள் 2028 ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மகளிர் அணி தற்போதே தங்களது இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஒலிம்பிக்கிற்கு நேரடியாகத் தகுதி பெற இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆடவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை உலகக்கோப்பை கணக்கில் கொள்ளப்படாது; மாறாக, ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலே தகுதியைத் தீர்மானிக்கும். வருகிற 2026 டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, ஆசிய கண்டத்தில் முதலிடத்தில் இருக்கும் அணி மட்டுமே நேரடியாக ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெறும். தற்போது சர்வதேச டி20 தரவரிசையில் உலக அளவில் இந்திய ஆடவர் அணி முதலிடத்தில் நீடிப்பதால், நடப்பு 2026-ஆம் ஆண்டின் இறுதி வரை இதே முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டால், இந்திய ஆடவர் அணியும் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தலா 4 கண்டங்களின் முதன்மை அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கான விதிகள்.
போட்டியை நடத்தும் அமெரிக்க அணி, 2026 டிசம்பர் 31-க்குள் ஐசிசி தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் வந்தால் அதற்கு 5-ஆவது இடம் நேரடியாக வழங்கப்படும். தகுதி பெறாத அடுத்த மிகச்சிறந்த 8 அணிகளுக்கு இடையே 2027-ஆம் ஆண்டு 'முதல் ஐசிசி ஒலிம்பிக் தகுதிச் சுற்றுத் தொடர்' நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் இறுதி 1 அணிக்கு 6-ஆவது இடமாக ஒலிம்பிக் டிக்கெட் வழங்கப்படும்.
கடந்த 1900-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்குக் பின் 2028 ஜூலை 12 முதல் 29 வரை லாஸ் ஏஞ்சல்ஸின் போமோனா மைதானத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
