அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல் ஜூலை 9ல் நல்லடக்கம் - 6 நாட்கள் இறுதிஊர்வலம்!

 
ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் குறித்த அதிகாரப்பூர்வ கால அட்டவணையை ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதன்படி, வரும் ஜூலை மாதம் 9-ஆம் தேதி அவரது உடல் புனித நகரான மஷ்ஹாத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். போர்ச் சூழல் காரணமாக மார்ச் மாதமே நடைபெற வேண்டிய அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்தன. தற்போது, அவர் மறைந்து 4 மாதங்களுக்குப் பிறகு இறுதிச்சடங்கு தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

ஈரான் உச்சத்தலைவர் காமேனி

ஈரான் அரசின் புதிய அறிவிப்பின்படி, அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் வரும் ஜூலை 4-ஆம் தேதி தலைநகர் டெஹ்ரானில் தொடங்குகின்றன. டெஹ்ரான் மற்றும் கோம் ஆகிய முக்கிய நகரங்களில் கமேனியின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையிலான பொது இறுதி ஊர்வலங்கள் மற்றும் பிரார்த்தனைகள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன.

ஜூலை 9: இறுதி நிகழ்வாக, வடகிழக்கு புனித நகரான மஷ்ஹாத்தில் அமைந்துள்ள ஷியா பிரிவினரின் உலகப் புகழ்பெற்ற 'இமாம் ரெசா' புனிதத்தலத்தில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

அலி கமேனியின் இறுதி விருப்பப்படி, ஒவ்வொரு நகரிலும் இந்த இறுதி ஊர்வல நிகழ்வுகள் குறைந்தது 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளில் இருந்து சுமார் 2 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஈரான் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.