தமிழகத்தில் நாளை ரம்ஜான் பெருநாள் - தலைமை ஹாஜி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
மொஹரம் ரம்ஜான் பக்ரீத் முஸ்லீம் மசூதி மொஹரம் ரம்ஜான் பக்ரீத் முஸ்லீம் மசூதி

புனித ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பு முடிவடைந்த நிலையில், ஷவ்வால் மாதத்திற்கான பிறை நேற்று (வியாழக்கிழமை) தென்படாததால், தமிழகத்தில் வரும் மார்ச் 21, சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி உஸ்மான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில், நேற்று மாலை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படவில்லை. எனவே இன்று (வெள்ளிக்கிழமை) ரமலான் மாதத்தின் 30-வது நோன்பு கடைப்பிடிக்கப்படும். இதைத் தொடர்ந்து, நாளை மார்ச் 21, சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பெருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் தமிழகம், புதுவையில் ரமலான் நோன்பு !

புதுச்சேரி தலைமை ஹாஜி இசூதீன் பாகவி வெளியிட்டுள்ள அறிவிப்பிலும், பிறை தென்படாத காரணத்தால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் சனிக்கிழமை மார்ச் 21ம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் என்பது ஈகை மற்றும் இறைவணக்கத்திற்குரிய மாதமாகும். பிறை கணக்கின்படி இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் முழுமையாக 30 நாட்கள் நோன்பு நோற்றுள்ளனர். அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை நீர் கூட அருந்தாமல் கடும் நோன்பிருந்து, அதன் நிறைவாக ஈத்-உல்-பித்ர் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

ரமலான்

சனிக்கிழமை காலை தமிழகத்தின் அனைத்து மசூதிகள் மற்றும் சென்னை தீவுத்திடல் உள்ளிட்ட திறந்தவெளி மைதானங்களில் ஈத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற உள்ளன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.