சித்திரை திருவிழா அட்டவணை அதிகாரப்பூர்வ வெளியீடு - மே 1ல் அழகர் ஆற்றில் இறங்குகிறார்! முழு அட்டவணை!
"தூங்கா நகரம்" மதுரையின் அடையாளமான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதற்கான தேதிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் பட்டியலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சித்திரை திருவிழா 2026 - முக்கிய தேதிகள்:
ஏப்ரல் 19 (ஞாயிறு): மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா கோலாகலமாகத் தொடங்குகிறது.
ஏப்ரல் 26 (ஞாயிறு): மதுரைக்கே அரசியாக மீனாட்சி அம்மன் முடிசூடும் பட்டாபிஷேகம் நடைபெறும்.

ஏப்ரல் 27 (திங்கள்): திக்குவிஜயம் நிகழ்வு நடைபெறும்.
ஏப்ரல் 28 (செவ்வாய்): விழாவின் சிகரமான மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் மிகவும் விமரிசையாக நடைபெறும்.
ஏப்ரல் 29 (புதன்): மாசி வீதிகளில் அன்னை மீனாட்சி பவனி வரும் தேரோட்டம் நடைபெறும்.
மே 1 (வெள்ளி): லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, பச்சை பட்டு உடுத்திக் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் மகா வைபவம் நடைபெறும்.

வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், பக்தர்களுக்குக் குடிநீர் வசதி, பந்தல் அமைத்தல் மற்றும் பாதுகாப்புப் பணிகளை மதுரை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இப்போதே முடுக்கிவிட்டுள்ளன. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால் கூடுதல் பேருந்து வசதிகளும் செய்யப்படவுள்ளன.
