அடக்கடவுளே.. ப்ரெண்ட் பர்த் டேவுக்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது - தூத்துக்குடியில் அட்ராசிட்டி!
தூத்துக்குடியில் நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதை வெடிக்கச் செய்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்ட 3 வாலிபர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
தூத்துக்குடி லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (22), அமுதாநகர் பிரகாஷ் (23) மற்றும் சுடலை காலனி குரு (21) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். அலெக்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்பகுதியில் 'கெத்து' காட்டுவதற்காக யூடியூப்பைப் பார்த்து மூவரும் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் தயாரித்த வெடிகுண்டை திறந்தவெளியில் வெடிக்கச் செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸாகப் பதிவிட்டுள்ளனர். இது குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில், தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இளைஞர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதில் வேறு வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கோஷ்டி மோதலுக்காக வெடிகுண்டு தயாரித்தார்களா அல்லது வேறு ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்ற கோணத்தில் தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
