அட பாவமே... பிரச்சாரத்திற்குப் புறப்பட்ட திமுக வேட்பாளர் வீடு புகுந்து 122 சவரன் நகைகள் கொள்ளை!
யார் பார்த்த வேலைடா இது? என்று விருதுநகர் முழுவதுமே பரிதாபப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளராக கடற்கரை ராஜ் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடற்கரை ராஜ், தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், அவரின் வீட்டில் யாரும் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு, வீடு புகுந்து 122 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன் தினம் மாலை, சாத்தூர் அருகேயுள்ள சத்திரப்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜை ஆதரித்து சிபிஎம் (CPI-M) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் பரப்புரை நடைபெற்றது. இந்தப் பரப்புரையில் பங்கேற்பதற்காகக் கடற்கரை ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 122 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிக் கொண்டு தப்பியோடினர்.
பரப்புரை முடிந்து இரவு வீடு திரும்பிய கடற்கரை ராஜ், கதவு உடைக்கப்பட்டு நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் போலீசார் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தேர்தல் நேரத்தில் வேட்பாளர் வீட்டின் மீதே நடத்தப்பட்ட இந்தத் துணிகரக் கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒரு முக்கிய வேட்பாளரின் வீட்டிலேயே இவ்வளவு பெரிய கொள்ளைச் சம்பவம் நடந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
