வாவ்... 13 அடி நீள வால்! கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க குதிரை!
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ‘ஜென்னி’ என்ற குதிரை, உலகிலேயே மிக நீளமான வால் கொண்ட குதிரை என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. இந்தக் குதிரையின் வால் 4.1262 மீட்டர் நீளம் கொண்டதாக அளவிடப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 13 அடி 6 அங்குலம் நீளமுள்ள இதன் வால் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஏழு ஆண்டுகளாகப் பராமரித்து வளர்த்த வால்
‘மவுண்ட்ஜாய்’ஸ் ஐஸ் பிரின்சஸ்’ என்பது ஜென்னியின் முழுப் பெயராகும். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங் வேலியில் வசிக்கும் இந்தக் குதிரையை மேக்கன்சி லோவ் மற்றும் ரேச்சல் எஸ்டெஸ் ஆகியோர் பராமரித்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு மேக்கன்சியின் 13-வது பிறந்தநாள் பரிசாக ஜென்னி அவருக்குக் கிடைத்தது.
அமெரிக்கன் சாடில்பிரெட் இனத்தைச் சேர்ந்த இந்தக் குதிரையின் வாலை நீளமாக வளர்க்க அதன் பராமரிப்பாளர்கள் முடிவு செய்தனர். சுமார் ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து பராமரித்து வந்த நிலையில், அதன் வால் உலக சாதனை படைக்கும் அளவுக்கு வளர்ந்தது. கடந்த ஜூலை 25-ம் தேதி அளவீடு செய்யப்பட்டு, கின்னஸ் உலக சாதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
வால் பராமரிக்கவே 5 மணி நேரம்!
ஜென்னியின் வாலைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, அதன் உரிமையாளர்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது தேவைப்படும்போது சுத்தம் செய்கின்றனர். வாலைக் கழுவுதல், உலர்த்துதல், சிக்கல்களை நீக்குதல், பின்னல் போடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒவ்வொரு முறையும் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகிறது.

இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு ‘ஜேஜேஎஸ் சம்மர் பிரீஸ்’ என்ற குதிரை 3.81 மீட்டர் நீள வாலுடன் சாதனை படைத்திருந்தது. சுமார் 19 ஆண்டுகளாக நீடித்த அந்தச் சாதனையை ஜென்னி தற்போது முறியடித்துள்ளது. சாதனை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதன் நீண்ட வாலுக்கு வெட்டும் சீரமைப்பும் செய்யப்பட்டதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.
