நாடு முழுவதும் புதிய கேஸ் இணைப்புகளுக்குத் தற்காலிகத் தடை - எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை!
தமிழகம் உட்பட நாடு முழுவதும் புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் சிலிண்டர்களை சட்டவிரோதமாகப் பெறுவதற்காக, பிற நபர்களின் ஆதார் எண்களைப் பயன்படுத்திப் போலி கேஸ் இணைப்புகள் பெறப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய போலி இணைப்புகளைக் கண்டறிந்து நீக்கும் பணியில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதால், புதிய இணைப்புகள் வழங்கும் மென்பொருள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் சிலிண்டர் விநியோகத் தட்டுப்பாடும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தத் தற்காலிகத் தடை குறித்து பெட்ரோலிய அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில் இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே. முறைகேடுகள் சரிபார்க்கப்பட்ட பின் புதிய இணைப்புகள் மீண்டும் வழங்கப்படும்.
தற்போதைய சிலிண்டர் விநியோகத் தட்டுப்பாட்டைச் சீர் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் நிலைமை சீரடைந்ததும் புதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

இனி வரும் காலங்களில் புதிய இணைப்பு பெறும்போது, ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு இன்னும் கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே உள்ள இணைப்புகளுக்குச் சிலிண்டர் விநியோகம் செய்வதில் எந்தத் தடையும் இல்லை. புதிய இணைப்புக்காகக் காத்திருப்பவர்கள், தங்களது ஆவணங்களைச் சரியாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
