அந்தமானில் புதிய இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிப்பு - ஆயில் இந்தியா நிறுவனம் சாதனை!
இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், அந்தமான் கடற்பகுதியில் பொதுத்துறை நிறுவனமான 'ஆயில் இந்தியா' நடத்திய தீவிர அகழ்வாராய்ச்சியில், மீண்டும் ஒரு புதிய பிரம்மாண்ட இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதார வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் 'திறந்தவெளி பரப்பு உரிமக் கொள்கையின்'கீழ், அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழமற்ற கடல் பகுதியில் இந்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அங்குள்ள 'ஸ்ரீ விஜயாபுரம்-3' என்ற மூன்றாவது ஆய்வு கிணற்றில், சுமார் 355 மீட்டர் கடல் ஆழத்தில் இந்த புதிய இயற்கை எரிவாயு இருப்பு வெற்றிகரமாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆயில் இந்தியா நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் கடலுக்கு அடியில் சுமார் 1,900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்திற்குத் துளையிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

முதற்கட்ட சோதனையின் போது, குழாய்களில் துளையிடப்பட்ட உடனேயே எரிவாயுவின் அழுத்தம் மிக வேகமாக அதிகரித்து, தொடர்ச்சியாகச் சுடர்விட்டு எரிந்ததன் மூலம் அங்கு இயற்கை எரிவாயு இருப்பதும், அது மிகச் சிறந்த தரத்தில் இருப்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த எரிவாயுவின் தரம், கலோரி மதிப்பு மற்றும் அதன் தோற்றம் குறித்து அறிய ஆய்வுக்கூடங்களுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த 2025-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்காக 'சமுத்ர மந்தன் திட்டம்' (தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி இயக்கம்) தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அந்தமான் பகுதியில் ஆயில் இந்தியா நிறுவனம் இதுவரை மூன்று கிணறுகளைத் தோண்டியுள்ளது.
அதில், கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் 'விஜயாபுரம்-2' கிணற்றில் முதல்முறையாக எரிவாயு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 3-வது கிணற்றிலும் எரிவாயு கண்டறியப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணறுகள் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளதால், ஒட்டுமொத்த அந்தமான் கடற்பகுதியும் இந்தியாவின் அடுத்த மிக முக்கிய 'எரிசக்தி மையமாக' மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் தளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். "அந்தமான் கடலில் புதிய எரிசக்தி வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது" என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவைகளுக்குப் பெருமளவில் வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் சூழலில், அந்தமானில் அடுத்தடுத்து நிகழும் இந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் கணிசமாகக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியைப் பலமடங்கு அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
