133 நாட்களுக்குப் பிறகு திறக்கப்படும் பழைய குற்றால அருவி - சுற்றுலாப் பயணிகள் குஷி!

 
குற்றாலம் ஐந்தருவி குற்றாலம் ஐந்தருவி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் கடுமையாகச் சேதமடைந்த பழைய குற்றால அருவி, சுமார் 4 மாத கால தீவிரப் புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

கடந்த நவம்பர் 16ம தேதியன்று பெய்த கனமழையால் பழைய குற்றால அருவியில் பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவிக்குச் செல்லும் சாலைகள், தரைதளங்கள், பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் கழிவறைகள் முற்றிலுமாகச் சிதைந்தன. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 133 நாட்களாக இங்குச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

குற்றாலம்

வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து மேற்கொண்டுள்ள மேம்பாட்டுப் பணிகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் அருகருகே நின்று குளிக்கும் நிலை இருந்தது. தற்போது அருவியின் நடுவே சுவர் போன்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் சேதமடையாத வகையில் வலுவான பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. செப்டிக் டேங்க் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

குற்றாலம்

தற்போது கோடை வெயில் காரணமாக அருவியில் தண்ணீர் வரத்து மிகக் குறைவாகவே உள்ளது. புனரமைப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், முதல் கோடை மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்தவுடன், சுற்றுலாப் பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மெயின் அருவி, ஐந்தருவி போன்ற இடங்களுக்கு நிகராகப் பழைய குற்றால அருவியும் புதுப்பொலிவு பெற்றுள்ளதால், வரும் கோடை விடுமுறைக்குக் குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.