ஓமன் கடல் பரப்பில் இந்திய கப்பல் மீது தாக்குதல்: கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையில் பதற்றம்!

 
omen omen

ஓமன் கடல் பரப்பில் வந்து கொண்டிருந்த 'MT Marivex' என்ற இந்தியக் கச்சா எண்ணெய் கப்பல் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாகக் கப்பலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தற்பொழுது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திக்கு தெற்கே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கப்பலில் மொத்தம் 24 இந்திய மாலுமிகள் பயணித்த நிலையில், தற்போதைய நிலவரப்படி அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாகப் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் உறுதிப்படுத்தியுள்ளது. கப்பல் மீது ஏதேனும் ஏவுகணை அல்லது மர்மப் பொருள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து முழுமையான விவரங்களை அறிய அதிகாரிகள் தற்பொழுது தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம், கடற்படை மற்றும் ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவை இணைந்து மாலுமிகளின் பாதுகாப்பைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. சர்வதேச கடல் எல்லை விதிகளின்படி இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்து மற்றும் கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்களில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.