ஆம்னி பேருந்து - ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி விபத்து... சம்பவ இடத்திலேயே பலியான 3 பிளஸ்-2 மாணவர்கள்!

 
விபத்து மாணவர்கள் விபத்து மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் நேர்ந்த கோர விபத்தில், ஸ்கூட்டரில் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சிவகாசி பகுதியைச் சேர்ந்த கோகுல் (17), பிரசன்னா (17) மற்றும் யுவராஜ் (17) ஆகிய மூன்று மாணவர்களும் பிளஸ்-2 படித்து வந்தனர். இன்று இவர்கள் மூவரும் ஒரே ஸ்கூட்டரில் சாத்தூர் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஸ்கூட்டரைச் சாலையின் எதிர்த் திசையில் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் எதிரே வந்த ஆம்னி பேருந்து ஒன்று, மாணவர்கள் வந்த ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

விபத்து

இந்த விபத்தின் வேகம் காரணமாக ஸ்கூட்டர் சுக்குநூறாக நொறுங்கியது. ஸ்கூட்டரில் சென்ற கோகுல், பிரசன்னா மற்றும் யுவராஜ் ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் போலீசார், மாணவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக ஆம்னி பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்விக்குச் செல்லத் தயாராக இருந்த மூன்று மாணவர்கள், ஒரு சிறு தவறுதலால் உயிரிழந்த சம்பவம் அவர்களது பெற்றோர்களையும் சக மாணவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.