தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - மாற்று டிரைவர் பலி; 6 பேர் படுகாயம்!
தூத்துக்குடி மாவட்டம், அரசரடி டோல்கேட் அருகே சாலையோரமாக நின்றுகொண்டிருந்த தண்ணீர் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய கோர விபத்தில், பேருந்தின் மாற்று ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பயணிகள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் விடுமுறை நாள்களில் இடம்பெற்ற இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கிப் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு புறப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களைக் கடந்து வந்த அந்தப் பேருந்து, இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் மேல அரசரடி சுங்கச்சாவடி பகுதிக்கு அருகில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தோ அல்லது சோர்வு காரணமாகவோ, சாலையோரமாக நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது அந்த ஆம்னி பஸ் பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் அதிர்வு காரணமாகப் பேருந்தின் முன்பகுதி முழுமையாக நொறுங்கி அப்பளம் போல் சேதமடைந்தது. பேருந்து லாரி மீது மோதிய விபத்தில், பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மாற்று டிரைவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், பேருந்தினுள் பயணம் செய்த பயணிகளில் 6 பேர் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் புதியம்புத்தூர் காவல் நிலையக் காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்களும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக 108 அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து குறித்துப் புதியம்புத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
