ஆம்னி பேருந்து நுழைவுக் கட்டணம் 233% உயர்வு - முதல்வர் விஜய்க்கு கோயம்பேடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம்!

 
ஆம்னி பேருந்து

சென்னை கோயம்பேடு ஒப்பந்த ஊர்திப் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவுக் கட்டணம் திடீரென 233 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.

சி.எம்.டி.ஏ. கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஒரு ஆம்னி பேருந்துக்கான 24 மணி நேர நுழைவுக் கட்டணம் இதுவரை ரூ.150-ஆக வசூலிக்கப்பட்டு வந்தது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வரும் அக்டோபர் 15 முதல் இது ரூ.500-ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி

இந்த திடீர் கட்டண உயர்வால், ஒரு பேருந்துக்கான மாதச் செலவு ரூ.4,500-லிருந்து ரூ.15,000-ஆக உயரும் (மாதத்திற்கு ரூ.10,500 கூடுதல் செலவு). எரிபொருள், சாலை வரி, சுங்கக் கட்டணம் போன்றவைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள உரிமையாளர்களுக்கு இது கூடுதல் சுமையையும், இறுதியில் பயணிக் கட்டணத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த நுழைவுக் கட்டண உயர்வை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். மறுபரிசீலனை செய்யும் வரை பழைய கட்டணமான ரூ.150-ஐயே தொடர்ந்து வசூலிக்க வேண்டும். உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பாஸ்டேக் முறை மூலமாகக் கட்டணம் வசூலிப்பதோடு, பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

ஆம்னி

கோயம்பேட்டில் போதிய இடவசதி இல்லாததால், தற்போது பயன்பாடின்றி உள்ள சி.எம்.டி.ஏ. பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்துகளின் பயன்பாட்டிற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஒதுக்கித் தர வேண்டும்; இதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் எனச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.