தறிகெட்டு ஓடிய ஆம்னி பேருந்து... நடைபாதையில் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு!
கேரள மாநிலம் கோட்டயம் சந்தக்கவல பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீதும், பொதுமக்கள் மீதும் மோதி கோர விபத்திற்குள்ளானது. இதில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அஞ்சலி அஜய் என்று முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் நட்டாச்சேரி காந்திஸ்மாரக மையம் அருகில் உள்ள இஞ்சேரிக்குன்று பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி அஞ்சலி என்பது உறுதியாகியுள்ளது. இவர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோட்டயத்தில் இருந்து சங்ஙனாச்சேரி நோக்கிச் சென்ற 'தண்டப்பிரா' என்ற தனியார் பேருந்துதான் இந்த வித்திற்குக் காரணமாகும். நாகம்படம் பகுதியில் இருந்து சந்தக்கவல நோக்கி வந்த அந்தப் பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நடைபாதை கிரில் மற்றும் மின்கம்பத்தை இடித்துத் தள்ளிவிட்டு அங்கிருந்த பயணிகள் மீதும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த அஞ்சலி உட்பட ஸ்ரீகுமாரி (54), ஜெயா (51), அனுமோல் சுரேஷ் (48) மற்றும் ஏ.கே. சுனி (46) ஆகிய ஐந்து பெண்கள் படுகாயமடைந்தனர். பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கோட்டயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
