கண்டெய்னர் லாரி மீது ஆம்னி மோதி விபத்து... படுகாயங்களுடன் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!
கேரளாவில் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார். தீயணைப்புத் துறையினர் போராடி ஓட்டுநரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கேரள மாநிலம் கொட்டாரக்கரை நோக்கிச் சென்ற மாருதி ஆம்னி கார், தாமரச்சேரி சாலை வளைவில் திரும்பியபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி முழுமையாக நசுங்கியதுடன், ஓட்டுநர் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், கடுமையாகப் போராடி ஓட்டுநரை மீட்டனர்.
பலத்த காயமடைந்த ஓட்டுநர் மீட்கப்பட்டு, கொட்டாரக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
