முதல் நாளே பரபரப்பு... வந்தவாசி அரசுப் பள்ளியில் கேஸ் கசிவால் பயங்கர தீ விபத்து!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், மதிய உணவு சமைக்கும் போது ஏற்பட்ட சமையல் எரிவாயு கசிவு காரணமாகச் சமையலறையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று காலையில்தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை உற்சாகத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வந்தவாசி பள்ளியில் மதிய உணவு நேரத்தின் போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
வழக்கம் போல் மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்களுக்குச் சத்துணவு சமைப்பதற்காகப் பள்ளிச் சமையல் ஊழியர்கள் கேஸ் அடுப்பைப் பற்றவைத்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாகச் சமையல் எரிவாயு சிலிண்டர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, சமையலறை முழுவதும் தீ கடகடவெனப் பரவிப் பிடிக்கத் தொடங்கியது.

சமையலறையில் இருந்து கரும்புகை கிளம்பி தீப்பிடித்ததைக் கண்டதும், பள்ளியில் இருந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகளை விட வந்திருந்த பெற்றோர்கள் அனைவரும் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியே ஓடினர். இதனால் அப்பகுதியே சில நிமிடங்கள் கடுமையான போர்க்களமாக மாறிக் காட்சியளித்தது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் பொதுமக்களும் பெற்றோர்களும் இணைந்து உடனடியாகத் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய பாதுகாப்புப் குளறுபடி அம்பலமாகியுள்ளது.
அவசரக் காலத் தேவைக்காகப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு உருளை விபத்தின் போது துரதிர்ஷ்டவசமாக வேலை செய்யவில்லை என அங்கிருந்த பெற்றோர்கள் ஆத்திரத்துடன் குற்றம் சாட்டியுள்ளனர். அவசரத்திற்கு உதவாத காலாவதியான தீயணைப்பு உபகரணங்களை வைத்திருந்த பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய அப்பட்டமான அலட்சியப்போக்கு, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
