இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இலவச அனுமதி... அதிரடி சலுகைகள்!
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் புராதன சின்னங்களைச் சுற்றுலா பயணிகள் இன்று ஏப்ரல் 18ம் தேதி ஒரு நாள் முழுவதும் கட்டணமின்றி இலவசமாகச் சுற்றிப் பார்க்கலாம் என இந்தியத் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலைத்திறனைப் பறைசாற்றும் வகையில் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம், வெண்ணை உருண்டை பாறை மற்றும் புலிகுகை உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் அமைந்துள்ளன. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்த இடங்களைக் காண்பதற்குத் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி 'உலக பாரம்பரிய தினம்' கடைபிடிக்கப்படுகிறது. நமது முன்னோர்களின் கலை மற்றும் கலாச்சார அடையாளங்களைப் போற்றிப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பாரம்பரிய சின்னங்களிலும் இன்று ஒரு நாள் மட்டும் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று ரசிப்பதற்கு இந்தியர்களுக்கு ரூ. 40-ம், வெளிநாட்டவர்களுக்கு ரூ. 600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இன்று சனிக்கிழமை மற்றும் வார விடுமுறை என்பதால், இந்தக் கட்டணச் சலுகையைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான பயணிகள் குடும்பத்துடன் மாமல்லபுரத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்புப் பணிகளுக்காகக் கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடங்களை இலவசமாகப் பார்த்து ரசிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
