புகாரளித்த அன்றே தவெக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு... காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்!

 
கள்ளக்குறிச்சி அருள்விக்னேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்ட மூத்த பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், புகார் அளிக்கப்பட்ட அதே நாளிலேயே கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டப்பேரவை உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சாட்சிகளிடம் நடத்தப்பட்ட முறையான விசாரணைக்குப் பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “கடந்த 23.11.2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அருள்விக்னேஷ்

ஐ.ஜி. காமினி மேற்பார்வையில் எஸ்.பி. ஸ்ரிஷ்டி சிங் விசாரணை: தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் WP (Crl) No. 3183/2026 வழக்கில் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங், IPS, சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் என். காமினி, IPS அவர்களின் மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார். விசாரணையின்போது புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அதன் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்துறையினரும், தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினரும் இணைந்து இதுவரை 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருள்விக்னேஷ

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் விவரங்கள் தொடர்பாக எந்தவொரு தகவலையும் வெளியிடவோ, பகிரவோ அல்லது பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவோ கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக எந்தவொரு பதிவையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.