ஓணம் பண்டிகை: சென்னை, தாம்பரம் - கேரளா இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - முன்பதிவு தொடங்கியது!

 
எக்ஸ்பிரஸ் ரயில்

கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை மிக விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்தத் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பயணிகளின் வசதிக்காகத் தென்னக ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை  அறிவித்துள்ளதுடன், அதற்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது.

மங்களூரு மற்றும் சென்னை எழும்பூர் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்கள் (வண்டி எண்: 06049 / 06050) இயக்கப்பட உள்ளன. மங்களூரு டூ சென்னை எழும்பூர்: ஜூலை 13, 20, 27 மற்றும் ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31 ஆகிய திங்கட்கிழமைகளில் இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ரயில்

சென்னை எழும்பூர் டூ மங்களூரு: மறுமார்க்கத்தில் ஜூலை 14, 21, 28 மற்றும் ஆகஸ்ட் 4, 11, 18, 25, செப்டம்பர் 1 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2:00 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்படும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, ஷொரனூர் மற்றும் கோழிக்கோடு வழியாக மறுநாள் காலை 8:40 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் மற்றும் கேரளா மாநிலம் கொல்லம் இடையே பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை இருமார்க்கங்களிலும் தங்களது சேவைகளை வழங்க உள்ளன. தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் பிற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 சிறப்பு ரயில்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்களின் வசதிக்காகத் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்குச் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே இருமார்க்கத்திலும் தலா 4 நாட்களுக்கு இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளது.

ஓணம் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களின் விபரங்கள் தற்பொழுது கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில்வே முன்பதிவு மையங்கள் மூலமாக டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. வார இறுதி சிறப்புப் பேருந்துகளுடன் இந்தச் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளதால், பண்டிகைக்குச் சொந்த ஊர் செல்லத் திட்டமிடும் பயணிகள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே தங்களது பயண இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.