ஒரு சிலிண்டர் ரூ. 7,000க்கு விற்பனை... அரசு கடும் எச்சரிக்கை... புகார் எண் அறிவிப்பு!
நாடு முழுவதும் நிலவும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சாதகமாக்கிக் கொண்டு, சில மர்ம நபர்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்குச் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றனர். சமீபகாலமாக நிலவும் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குத் தேவையான 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு வழக்கமான விலையை விடப் பல மடங்கு கூடுதலாக, ஒரு சிலிண்டர் ரூ. 5,000 முதல் ரூ. 7,000 வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலையைக் காரணம் காட்டி, உணவகங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் உணவுகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது முற்றிலும் சட்டவிரோதமானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்வதைத் தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிலிண்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஏஜென்சிகளில் திடீர் சோதனைகள் நடத்தப்படும்.
சிலிண்டர் தட்டுப்பாடு அல்லது கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் 1915 என்ற தேசிய நுகர்வோர் உதவி எண்ணிற்கு உடனடியாகப் புகாரளிக்கலாம். கள்ளச்சந்தையில் ஈடுபடுபவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்டுள்ள இந்தத் தட்டுப்பாட்டினால் சிறு உணவகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு தலையிட்டு சிலிண்டர் விநியோகத்தைச் சீர்செய்ய வேண்டும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
