லாரி மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து - ஒருவர் பலி; 40 பேர் படுகாயம் - திருச்சி அருகே பரபரப்பு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடந்த முக்கோண விபத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த வேன் மற்றும் லாரி மீது, அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாகப் பலமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் வேனில் பயணித்த திருநெல்வேலியைச் சேர்ந்த சிராஜ் உசேன் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், இந்த விபத்தில் பேருந்து மற்றும் வேனில் பயணித்த 40 பேர் பல்வேறு காயங்களுக்கு உள்ளாகினர். விபத்து குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநரின் அலட்சியம் காரணமாக விபத்து நடந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
