கோவை கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது - கைதானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

 
அமுதன்

கோவை தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு எஞ்சினியரிங் படித்து வந்த மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், சந்தோஷ் என்ற மாணவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19) என்ற கல்லூரி மாணவர், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். செட்டிபாளையம் போலீசாரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, ஆரமுதன் (20), அரவிந்த் (21), சிவா ரோகித் (20), மணி பாலு (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், கொலையில் தொடர்புடைய சந்தோஷ் என்ற மாணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அமுதன்

மாணவர் அமுதன் கொலை குறித்து மாவட்டப் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தலைமையிலான தனிப்படை போலீசார் அளித்த விளக்கத்தில்,  விடுதியில் தங்கியிருந்த மாணவர்களிடம் முகமூடி அணிந்து சென்று செல்போன்களைப் பறித்த சம்பவத்தில் அமுதனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரைத் தாக்கியதிலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

அமுதன்

போதைப்பொருள் தொடர்பாகப் புகாரளித்ததால் தான் இக்கொலை நடைபெற்றது என்ற தகவலை மறுத்துள்ள போலீசார், செல்போன் பறிப்புப் பிரச்சினையே இதன் பின்னணி எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 20 மாணவர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் 7 மாணவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.