மேற்கு வங்க முதல்வரின் உதவியாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!
மேற்கு வங்காள முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் முன்னாள் உதவியாளர் சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியைச் மத்திய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வெறும் இரண்டு நாட்களேயான நிலையில், பாஜக தலைவரான சுவேந்து அதிகாரியின் மிக நெருங்கிய உதவியாளராகச் செயல்பட்டு வந்த சந்திரநாத் ரத், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், இந்த உயர்மட்டக் கொலை வழக்கின் தீவிரத்தன்மை கருதி, விசாரணை உடனடியாக சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை கையில் எடுத்துப் போர்க்கால அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையின் பலனாக, இக்கொலைச் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த 3 கூலிப்படையினர் ஏற்கனவே சிபிஐ-யால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த கொலைச் சதியில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஞானேந்திர பிரதாப் சிங் என்பவரைச் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வந்தனர்.

போலீசாரின் பிடி இறுகுவதை உணர்ந்த ஞானேந்திர பிரதாப் சிங், தந்திரமாக மற்றொரு குற்ற வழக்கில் பல்லியா நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தார். இதனையடுத்து அவர் 'மாவ்' சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனைத் துல்லியமாகக் கண்காணித்த சிபிஐ அதிகாரிகள், சந்திரநாத் ரத் கொலை வழக்குத் தொடர்பாகச் சிறையில் இருந்த ஞானேந்திர பிரதாப் சிங்கை முறைப்படி கைது செய்தனர். தற்போது அவரை நீதிமன்ற அனுமதியுடன் கொல்கத்தாவுக்கு அழைத்து வந்து, இந்த கொலையின் பின்னணியில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் சதித்திட்டம் குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
