ஒருதலைக் காதலால் விபரீதம்... காதலை ஏற்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி கொலை!

 
மாணவி ஒருதலைக் காதல்

பீகார் மாநிலத்தில் பள்ளிக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்த 12-ஆம் வகுப்பு மாணவியை வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் கைஜியா கிராமத்தைச் சேர்ந்த உமேஷ் என்பவரின் மகள் சோனம் குமாரி (17). இவர் அருகே உள்ள புசா நகரில் இயங்கி வரும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் நேற்று காலையில் சோனம் குமாரி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், திடீரெனத் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மாணவியை நோக்கிச் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சோனம் குமாரி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி மானவி தற்கொலை

சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய இளைஞரைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டையும் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சோனம் குமாரியைக் காதலிக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு மாணவி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த வாலிபரைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.