ஒருதலைக் காதலால் விபரீதம்...பேச மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், ஒருதலைக் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஒருவரைப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரில் தொடர்புடைய இளைஞரை காரைக்கால் காவல்துறையினர் சில மணி நேரங்களிலேயே கைது செய்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று அதிகாலை அந்தப் பெண் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக உள்ளே புகுந்த ஒரு இளைஞர், அந்தப் பெண் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து அந்தப் பெண்ணை மீட்டனர்.

முதலில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, உடலில் பல இடங்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து காதலிப்பதாகக் கூறித் தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்காததால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் திட்டமிட்டு இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காரைக்கால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், தப்பியோடிய இளைஞரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். தற்போது அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு, அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் இச்சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டத்தில் குதித்துள்ளதால் காரைக்காலில் பரபரப்பு நிலவுகிறது.
