ரேஷன் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை - அமைச்சர் அறிவிப்பு!
வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கவும் நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை உயர்ந்ததால் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளது. மேலும், அதிகளவில் வெங்காயம் உற்பத்தியாகும் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூ. 56 முதல் ரூ. 60 வரை விற்கப்பட்டு வருகிறது.
வெங்காய விலையைக் கட்டுப்படுத்தத் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் இந்த வெங்காயம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களைக் கொண்ட 8,739 நியாயவிலைக் கடைகளில், வரும் 3-ம் தேதி முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 35-க்கு வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
