ஆன்லைன் முன்பதிவு அவசியம்... அபுதாபியில் மீண்டும் இந்து கோவில் திறப்பு!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தின் எதிரொலியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற பி.ஏ.பி.எஸ். (BAPS) இந்து கோவில் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அபுதாபி இந்து கோவில் கடந்த சில வாரங்களாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. பிராந்தியத்தில் நிலவிய பதற்றம் குறைந்ததைத் தொடர்ந்து, தற்போது வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, நாளை மறுநாள் (ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை) முதல் கோவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும். வாரத்தின் செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி உண்டு. (திங்கட்கிழமை தோறும் கோவிலுக்கு விடுமுறை).
கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் வழக்கம்போல் தங்களது வருகையை ஆன்லைன் (mandir.ae) மூலம் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

தற்காலிகமாகப் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடையாளச் சான்றாக எமிரேட்ஸ் ஐடிஅல்லது பாஸ்போர்ட் வைத்திருப்பது கட்டாயமாகும். போர் மேகங்கள் கலைந்து, மீண்டும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுவது அமீரகத்தில் வாழும் இந்தியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
