4 நாட்கள் மட்டுமே வாய்ப்பு.. நாளை தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல்! முக்கியக் கட்டுப்பாடுகள் என்னென்ன?
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனுக்களை அளிக்கலாம்.
மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை மனுத் தாக்கல் செய்யக் கால அவகாசம் இருந்தாலும், பொது விடுமுறை நாட்கள் போக வெறும் 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய முடியும்.
மனுத் தாக்கல் செய்யக்கூடிய நாட்களாக மார்ச் 30, ஏப்ரல் 2, ஏப்ரல் 4, ஏப்ரல் 6 என நான்கு நாட்கள் இருக்கிறது. மனுத் தாக்கல் செய்ய இயலாத விடுமுறை நாட்களாக மார்ச் 31 (செவ்வாய்), ஏப்ரல் 1 (புதன்), ஏப்ரல் 3 (வெள்ளி), ஏப்ரல் 5 (ஞாயிறு) அமைந்துள்ளது.
வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

கவனிக்க வேண்டிய 5 முக்கியக் கட்டுப்பாடுகள்:
தேர்தல் ஆணையம் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கருதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது: தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தின் 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வேட்புமனுத் தாக்கலின் போது வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி உண்டு. அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளரை ஒரு வாக்காளர் முன்மொழிய வேண்டும். சுயேச்சை அல்லது பதிவு செய்யப்படாத கட்சி வேட்பாளரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும். பொதுப் பிரிவினருக்கு ரூ. 10,000, தனித் தொகுதி வேட்பாளர்களுக்கு ரூ. 5,000.
'Suvidha Portal' வழியாக மனுக்களைப் பூர்த்தி செய்யலாம், ஆனால் பூர்த்தி செய்த படிவங்களை நேரில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்.

உறுதிமொழிப் பத்திரத்தில் தாக்கல் செய்ய வேண்டியவை:
வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரங்கள் மட்டுமின்றிப் பின்வரும் விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகால வருமான வரி கணக்கு விபரங்கள். வேட்பாளர், மனைவி/கணவர் மற்றும் சார்ந்திருப்பவர்களின் அசையும், அசையா சொத்து விபரங்கள். நிலுவையில் உள்ள மற்றும் தண்டனை பெற்ற குற்ற வழக்கு விபரங்கள். சமூக வலைதளக் கணக்குகள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள்.
