இன்று திருச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி; முதியவர்கள், கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பு விதிமுறைக் கட்டுப்பாடு!

 
விஜய் விஜய்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று மாலை திருச்சியில் பங்கேற்கும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான கடுமையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய். இந்தியத் தேர்தல் விதிகளின்படி திருச்சி கிழக்கு தொகுதி பதவியை அவர் ராஜினாமா செய்துள்ள நிலையில், தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக இன்று மாலை திருச்சியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விடுக்கப்பட்ட மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல் மற்றும் முதலமைச்சரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்குக் கடுமையான நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் கான்வாய் போக்குவரத்து விஜய் கார்

நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களைத் த.வெ.க பொதுச் செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ளும் திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி அறிவிப்பு விழா, இன்று மாலை 4.15 மணி முதல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்கக் முன்கூட்டியே அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்வாக மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது: மாவட்ட நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்ட த.வெ.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 5,000 பேருக்கு மட்டுமே சிறப்பு QR குறியீட்டுடன் (QR Code) கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே விழா வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள் (முதியவர்கள்), மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் ஆகியோருக்கு  கண்டிப்பாக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படவில்லை எனத் தலைமை நிலையம் தெளிவுபடுத்தியுள்ளது. அனுமதிச் சீட்டு இல்லாத ஏனைய கழகத் தோழர்கள், பொதுமக்கள் யாரும் விழா இடத்திற்கு நேரில் வர வேண்டாம் என்றும், நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள நேரலைகள் வாயிலாகக் கண்டு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விஜய்

QR குறியீடு மூலம் உள்ளே அனுமதிக்கப்படும் நபர்களுக்குத் தேவையான பாதுகாப்பான குடிநீர் மற்றும் அவசர மருத்துவ உதவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடுகள் வளாகத்திற்குள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பங்கேற்பாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறையால் தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி வான்வெளியில் ஏற்கனவே ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் தடை விதித்துள்ள நிலையில், இந்த 5,000 பேருக்கு மட்டுமேயான கட்டுப்பாடு முதலமைச்சரின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.