கரூரில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கருதி 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!!

 
தவெக விஜய்

நாளைகரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் விஜய், அங்கு நடைபெறும் பிரம்மாண்ட ரோடுஷோவிற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் பொதுமக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்க உள்ளார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்விற்கான விரிவான பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துகாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட விபத்து மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டும், முதலமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டும் மாவட்டக் காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  சுமார் 10,000 பேர் வரை அமரக்கூடிய வசதி கொண்ட பிரம்மாண்ட அரங்காக இது இருந்தாலும், எவ்வித அசம்பாவிதங்களும் நெரிசல்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பாதுகாப்பு கருதி 5,000 பேருக்கு மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விஜய்

நாளை காலை 11:00 மணிக்கு இந்த முக்கிய மக்கள் சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடங்க உள்ளது. எனினும், கடுமையான சோதனைகளுக்குப் பிறகே பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், நாளை காலை 8:00 மணி முதலே தகுதியான பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கூட்ட நெரிசலை முற்றிலுமாகத் தவிர்த்து, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி அமர்வதற்காக அரங்கு முழுவதும் ஜெர்மன் தொழில்நுட்பப் பந்தல் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது. அரங்கு முழுவதும் 40 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்ட 16 தனித்தனிப் பெட்டி போன்ற அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கரூர் விஜய்

இந்த ஒவ்வொரு தனிப் பிரிவிலும் தலா 315 பேர் வீதம் மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமர வைக்கப்பட உள்ளனர்.

கரூரில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அமரும் 16 பிரிவுகளிலும் தடையற்ற மின்சார வசதியுடன் கூடிய நூற்றுக்கணக்கான மின்விசிறிகள் மற்றும் ஏர்-கூலர்கள் பொருத்தப்பட்டு, குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் இந்த பாதுகாப்பு அடுக்குகள் மற்றும் இருக்கை ஒழுங்குமுறைகள் காரணமாக, நாளை முதலமைச்சர் பங்கேற்கும் கரூர் நிகழ்ச்சி எவ்விதப் பதற்றமுமின்றிச் சுமுகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.