சபரிமலையில் தினமும் 80,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - கேரள காவல்துறை புதிய வழிகாட்டுதல்கள்!
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பான தரிசனம் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்துக் கேரள காவல்துறை புதிய மற்றும் தீவிர வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
சபரிமலையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் இணையவழி மூலமாக வரிசை முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்நேர உடனடி முன்பதிவு மையங்கள் அனைத்தும், நிலக்கல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் தினசரி 10,000 பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு வசதி வழங்கப்பட உள்ளது. வனப் பாதைகள் வழியாக யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் ஆன்லைன் அல்லது உடனடி முன்பதிவு கட்டாயமாகும்.
தனியார் வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிலக்கல் அடிவார முகாமிலேயே நிறுத்திவிட்டு, அங்கிருந்து பம்பையை அடைவதற்கு அரசு இயக்கக்கூடிய கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து சேவைகளைப் பயன்படுத்த வேண்டும். நிலக்கலில் இருந்து பம்பை செல்லும் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

14 பயணிகள் வரை அமரக்கூடிய வாகனங்கள் மட்டும் பக்தர்களை இறக்கிவிடுவதற்காகப் பம்பை வரை செல்ல அனுமதிக்கப்படும். எனினும், அந்த வாகனங்கள் உடனடியாகத் திரும்பி வந்து நிலக்கலில் உள்ள பார்க்கிங் மையத்தில்தான் நிறுத்தப்பட வேண்டும். 14 பயணிகளுக்கு மேல் அமரக்கூடிய பெரிய தனியார் வாகனங்கள் பம்பைக்குச் செல்ல அனுமதி கிடையாது.
பக்தர்கள் புனிதப் பம்பை நதியில் துணிகளை வீசக்கூடாது என்றும், பம்பை நதியின் தூய்மையைப் பராமரிப்பதிலும் சபரிமலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் அனைத்துப் பக்தர்களும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேரள காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
