அச்சச்சோ... 61 அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு.. சிறுமி உட்பட 15 உடல்கள் மீட்பு - 51 பேர் பலி என அச்சம்!

 
நடுக்கடல் நடுக்கடலில் படகு கவிழ்ந்து

ஆப்பிரிக்க நாடான லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் கடல் வழியாகச் சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற அகதிகளின் படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு சிறுமி உட்பட 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இக்கோரச் சம்பவத்தில் மேலும் 36 பேர் நீரில் மூழ்கித் தத்தளித்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்தமாகப் பலி எண்ணிக்கை 51 ஆக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

லிபியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து கடந்த வார இறுதியில் 61 அகதிகளை ஏற்றிக்கொண்டு விசைப்படகு ஒன்று ஐரோப்பிய நாடுகளை நோக்கிக் புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்தப் படகு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நிலைகுலைந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கித் தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர். விபத்து நேர்ந்த பகுதியில் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் அகதிகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.

படகு கவிழ்ந்து

கடலில் மூழ்கியவர்களில் 10 பேர் மட்டும் மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பின் நீந்திப் பத்திரமாகக் கரை சேர்ந்து உயிர் தப்பியுள்ளனர். எஞ்சிய 51 பேர் கடலின் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். தற்போது வரை கடலோரப் பகுதிகளில் ஒரு சிறுமி உட்பட 15 பேரின் உடல்கள் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. அவற்றை சர்வதேசச் செம்பிறை சங்க தன்னார்வலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

#BREAKING: படகு கவிழ்ந்து பெரும் விபத்து!! 11 பேர் பலி!

கடலில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ள மீதமுள்ள 36 அகதிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படும் சூழலில், லிபிய நாட்டு ராணுவம் மற்றும் கடற்படைக் கப்பல்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வறுமை மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து லிபியா வழியாக ஐரோப்பாவிற்குப் படகுகளில் தப்பிச் செல்ல முயன்று, மத்திய தரைக்கடலில் அகதிகள் பலியாவது நடப்பு 2026-ஆம் ஆண்டிலும் சர்வதேச அளவில் பெரும் தொடர்கதையாகவும் மனிதநேயச் சோகமாகவும் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.