அச்சச்சோ... தென்மேற்குப் பருவமழை பொய்க்கும் அபாயம் - கோவை வெதர்மேன் எச்சரிக்கை!
கோவை வெதர்மேன் என்று பரவலாக அறியப்படும் சந்தோஷ் க்ரிஷ், நடப்பு ஆண்டின் தென்மேற்குப் பருவமழை நிலைமை மற்றும் வரவிருக்கும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை, கடந்த 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடப்பு ஆண்டைப் போல ஒரு மோசமான சூழல் இருந்ததே இல்லை என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்த பூமி உருவான காலத்திலிருந்தே வறட்சியும் வெள்ளமும் ஒரு சுழற்சியாகவே இருந்து வருகின்றன. ஆனால், தற்போதைய தொழில்மயமாக்கல் காரணமாக ஏற்பட்டுள்ள தீவிர காலநிலை மாற்றத்தால், இந்த வறட்சியும் வெள்ளமும் இப்போது மனிதக் கட்டுப்பாட்டை மீறித் தீவிரமடைந்துள்ளன.
நிலத்தடி நீர்மட்டத்தைக் கருதாமல் அதிகப்படியான ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது, தென்னை அல்லது பாக்கு போன்ற அதிகத் தண்ணீர் தேவைப்படும் பயிர்களைத் திட்டமிடலின்றி அதிகரிப்பது போன்ற தவறான செயல்பாடுகளால் நாம் தற்பொழுது திகைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டும் மற்றும் அடுத்த ஆண்டு கோடைக் காலத்திலும் நாம் மிகக் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கோவை வெதர்மேன் எச்சரித்துள்ளார். இதற்குக் காரணியாக, இந்த ஆண்டு நிச்சயமாக ஒரு 'சூப்பர் எல் நினோ' ஆண்டாக இருக்கும் என்று அவர் கணித்துள்ளார். இதனுடைய நேரடி மற்றும் பக்கவிளைவுகள் அடுத்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை காலம் தொடங்கும் வரை கூட நீடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் கடந்த 9 ஆண்டுகளாகத் தான் உண்மையான வானிலை கணிப்புகளை வழங்கி வருவதாகக் கூறிய அவர், பின்தொடர்பவர்களை அதிகரிப்பதற்காக இன்னமும் கனமழை பெய்யும் என்று பொய் பிரச்சாரங்களைச் செய்து மக்களை ஏமாற்றுபவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

"அடுத்த கனமழை எப்போது வரும் என்ற பின்தொடர்பவர்களின் தொடர் கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலேயே கடந்த சில மாதங்கள் மிகவும் பரபரப்பாகவும் சோர்வாகவும் கழிந்துவிட்டன. எனவே, எனது மன அமைதிக்காக இதிலிருந்து எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது."
சாதகமற்ற சூழல் நிலவும் போது வானிலைக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதால், வரவிருக்கும் நாட்களில் மழைக்கான ஏதேனும் சாதகமான சூழல் ஏற்படும் போது மட்டுமே மீண்டும் பதிவிடப் போவதாகவும், அதுவரை தங்களிடமிருந்து தினசரி வானிலை அறிக்கையை யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் கூறி அவர் தற்காலிகமாக விடைபெற்றுள்ளார்.
