ஜி.எஸ்.டி. சோதனைக்கு எதிர்ப்பு... சென்னையில் வடமாநில வியாபாரிகள் திடீர் போராட்டம்!

 
 வடமாநில வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம்

சென்னை சவுகார்பேட்டையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடத்திய சோதனையைக் கண்டித்து, ராஜஸ்தானைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சென்னை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், சோதனைக்கு வந்த அதிகாரிகளை அங்கேயே சிறைபிடித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திச் சிறைபிடிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அதிகாரிகளைப் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். ஜி.எஸ்.டி. சோதனை என்ற பெயரில் தங்களை அதிகாரிகள் தேவையின்றி அச்சுறுத்துவதாகவும், லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும் வியாபாரிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து இன்று சவுகார்பேட்டை பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வடமாநில வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.