மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு.. முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை!

 
டாஸ்மாக் டாஸ்மாக்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில், டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இளைஞர் ஒருவர் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர், தனது பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளால் ஏராளமான குடும்பங்கள் சீரழிவதைக் கண்டு மனவேதனை அடைந்துள்ளார். தமிழகத்தில் மதுவிற்பனையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், மதுக்கடைகளை மூட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

டாஸ்மாக்

அந்தக் கடிதத்தை எழுதி வைத்த பின்னர், பிரபாகரன் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பிரபாகரன் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், உள்ளே சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரது உடலைக் கண்டு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பார்ப்போரை நெகிழச் செய்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார், பிரபாகரனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

டாஸ்மாக்

மதுக்கடைகளுக்கு எதிராக இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மதுக்கடைகளை மூடக் கோரி திரண்டதால் லேசான பதற்றம் நிலவியது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.