விஜய் கட்சியில் இணையும் ஓபிஎஸ்... தமிழக அரசியலில் பரபரப்பு!

 
ஓபிஎஸ்

அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக் கூடும் என்ற  தகவல் தேனி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்துள்ள சூழலில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்த அரசியல் சூழலில், தென் மாவட்டங்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் குறித்தும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா ஓபிஎஸ்

ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார், தவெகவின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாகத் தீவிரத் தொடர்பில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில காலமாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குத் தற்போதைய அரசியல் களத்தில் போதிய முக்கியப் பொறுப்புகளோ அல்லது அங்கீகாரங்களோ கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, தங்களது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த  முடிவை நோக்கி அவர்கள் நகரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஓபிஎஸ்

இது குறித்து தேனி மற்றும் மதுரை மாவட்ட தவெக முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் முதற்கட்ட ஆலோசனைகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை சென்னை அடுத்த கோவளத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெகவின் தோழமைக் கட்சிகளின் உயர்மட்டக் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் தவெகவில் இணையப் போவதாக செய்திகள் வலம் வருகின்றன.