தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்?! - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அதிமுகவில் இணைந்தார்!

 
அதிமுக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியபோது, ஓ. பன்னீர்செல்வத்தின் பக்கபலமாக நின்று 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்' என்ற பெயரில் செயல்பட்டு வந்தவர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.

ஓபிஎஸ்

ஓபிஎஸ் திமுகவில் இணைந்த முடிவால் அதிர்ச்சியடைந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இன்று காலை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ், தற்போது அதே கொள்கைக்கு மாறாக திமுகவில் இணைந்ததை ஏற்க முடியாமல் அவரது ஆதரவாளர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். இதுவே இத்தகைய விலகல்களுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்

நேற்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிலையில், இன்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் போன்ற முக்கியத் தலைவர்கள் அவரிடமிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். தற்போது எஞ்சியிருந்த விசுவாசமான ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்குத் திரும்புவது, ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக தனது பலத்தை மீண்டும் ஒருங்கிணைத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.