நாளை ‘ஜெ’ பிறந்தநாளில் திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்... சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ரத்து!

 
ஜெயலலிதா ஓபிஎஸ்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று சென்னையில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்த ஆண்டும் நாளை பிப்ரவரி 24-ம் தேதி சென்னையில் மரியாதை செலுத்தப் போவதாக கடந்த 19-ம் தேதி ஓபிஎஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த அறிவிப்பு திடீரெனத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, அவர் சென்னையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பதைத் தவிர்த்துவிட்டு, தனது போடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மட்டும் மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா

ஓபிஎஸ்ஸின் இந்தத் திடீர் பின்வாங்கல்தான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. அவர் விரைவில் திமுகவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் உலா வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸின் நெருங்கிய ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஏற்கனவே திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். இந்தச் சூழலில் ஓபிஎஸ் மட்டும் தனியாக இயங்குவது கடினம் என்பதால், அவரும் ஆளுங்கட்சிப் பக்கம் சாய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஜெயலலிதா

அதேவேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட ஓபிஎஸ், அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியைத் தவிர்ப்பது, அதிமுகவின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வருவதையும் அவர் புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்வதையும் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது.