தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. சென்னை, மதுரை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று நிலவும் வானிலை மாற்றங்கள் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இவற்றுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் இங்கு 'மஞ்சள் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை அக்டோபர் 18ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழையும், கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அக்டோபர் 19ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழையும், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 20ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் மிக கனமழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். இதனிடையே, தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
