கோவில் யானைகளை மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பும் உத்தரவு ரத்து!
தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளை அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு மாற்ற வேண்டும் எனத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்துள்ளது.
தேனியைச் சேர்ந்த ஷேக் முகமது என்பவர் 'லலிதா' என்ற பெண் யானைக்கு உரிமைதாரர் சான்று கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2023-ஆம் ஆண்டு யானையை மாவட்ட வன அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் தனிநபர்களிடம் உள்ள யானைகளையும் அரசு யானைகள் மறுவாழ்வு முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளரும், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி எந்த ஒரு கோரிக்கையும் மனுதாரரால் முன்வைக்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த கோவில் யானைகளையும் முகாம்களுக்கு அனுப்ப உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கும் முன்பு சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்கள் தரப்பு வாதங்களைக் கேட்கவில்லை என்றும், தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு விதிகள் கோவில்களில் யானைகளை வளர்க்கவும் பராமரிக்கவும் அனுமதித்துள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதிகள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்தனர்.
