இன்று நேரில் ஆஜராக உத்தரவு... முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!
டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் மற்றும் டெண்டர் ஒதுக்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் முறைகேடு வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இம்முறைகேடு தொடர்பான விசாரணைக்காகச் செந்தில் பாலாஜியை இன்று காலை 11 மணிக்குச் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கொள்முதல் மற்றும் டெண்டர் விநியோகத்தில் விதிகளை மீறி முறைகேடு செய்ததாகச் செந்தில் பாலாஜி உட்பட மொத்தம் 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி வந்த லஞ்ச ஒழிப்புத்துறை, தற்போது நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்திலும் தலைமைச் செயலகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
