தீபாவளி முன் வரவு வைக்க உத்தரவு... விவசாயிகளுக்கு ரூ.603 கோடி சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு!

 
விவசாயி பயிர்க்கடன் தள்ளுபடி நிதியுதவி

தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.603.34 கோடியை வழங்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-2026ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்குச் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.709.50 வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 90,000 கரும்பு விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள்.

விவசாயி

முன் எப்போதும் இல்லாத வகையில் மாநில அரசின் நிதியிலிருந்து இதற்காக ரூ.603.34 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் தகவல் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் என மொத்தம் 29 சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு, ஒன்றிய அரசின் நியாயமான விலையான ரூ.3,290.50 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையான ரூ.709.50 சேர்த்து டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.4,000 கிடைப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரைக் கட்டுமானம் 9.5 சதவீதத்திற்கு மேல் உள்ள கரும்பிற்கு அதற்கேற்ப கூடுதல் விலையும் கிடைக்கும்.

விவசாயி

சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளின் ஆதார் எண், கரும்பு எடை மற்றும் வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையினால் ஒத்திசைவு செய்யப்பட்ட, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடிப் பணப்பரிவர்த்தனை வாயிலாக இந்தச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பணி எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.