போலி ஓ.ஆர்.எஸ் விவகாரம்... ஐதராபாத் மருத்துவர் அதிரடி ராஜினாமா!
ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிவ ரஞ்சனி சந்தோஷ், இந்தியக் குழந்தைகள் நல அகாடமி அமைப்பிலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, போலி ஓ.ஆர்.எஸ் தயாரிப்புகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) விதிமுறைகளைப் பின்பற்றாத குளிர்பானங்கள் சந்தையில் ஓ.ஆர்.எஸ் என்ற பெயரில் விற்கப்படுவதை எதிர்த்து இவர் போர்க்கொடி தூக்கி வந்தார். குறிப்பாக, அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் ஓ.ஆர்.எஸ் என விற்கப்படுவது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து என எச்சரிக்கை விடுத்த இவருக்கு, மருந்து நிறுவனங்கள் சட்ட ரீதியான நோட்டீஸ்களை அனுப்பி மிரட்டியுள்ளன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தான் சார்ந்திருக்கும் ஐ.ஏ.பி (IAP) அமைப்பு தனக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதிக்காக அமைப்பின் தலைமை மௌனம் காப்பதாகவும் டாக்டர் சிவ ரஞ்சனி குற்றம் சாட்டியுள்ளார். "குழந்தைகளின் நலனை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமே முக்கியம் எனக் கருதும் இடத்தில் என்னால் நீடிக்க முடியாது" என உருக்கமாகத் தெரிவித்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒரு மருத்துவர் தனது சமூகப் பொறுப்பிற்காகத் தனி ஆளாக நின்று போராடியும், துறை சார்ந்த அமைப்பு அவருக்குத் துணை நிற்காதது மருத்துவ உலகையே அதிர வைத்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. "உண்மைக்காகக் குரல் கொடுத்த மருத்துவருக்குத் துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்வாக்கிற்கு அடிபணிந்து செயல்படும் அமைப்புகள் குறித்துத் தேசிய அளவில் விவாதங்கள் தொடங்கியுள்ளன. தர்மத்திற்காகத் தனது பதவியைத் துறந்த டாக்டரின் இந்தத் துணிச்சலான முடிவு, வரும் காலங்களில் போலியாக விற்கப்படும் மருத்துவப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போலி ஓ.ஆர்.எஸ் விற்பனைக்கு எதிராகப் போராடிய டாக்டர் சிவ ரஞ்சனி சந்தோஷ் ராஜினாமா.
