ஆஸ்கர் விருது வென்ற பிரபல பாடகர் கிளென் ஹான்சார்ட் விபத்தில் உயிரிழப்பு... இசையுலகில் பெரும் சோகம்!

 
பாடகர் க்ளென்

'ஒன்ஸ்' திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது வென்ற புகழ்பெற்ற அயர்லாந்து பாடகரும் பாடலாசிரியருமான கிளென் ஹான்சார்ட் (56), டப்ளின் புறநகர்ப் பகுதியில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் உலகளவில் இசை ரசிகர்களிடையேயும் திரையுலகினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் டப்ளின் நகருக்கு அருகிலுள்ள லூக்கன் பகுதியில் நேற்று பாடகர் கிளென் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

டப்ளின் தெருக்களில் தெருப்பாடகராகத் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய ஹான்சார்ட், 'தி ஃபிரேம்ஸ்' மற்றும் 'தி ஸ்வெல் சீசன்' ஆகிய புகழ்பெற்ற இசைக்குழுக்கள் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார். 1991-ல் வெளியான 'தி கமிட்மென்ட்ஸ்' திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். 2007-ஆம் ஆண்டு வெளியான 'ஒன்ஸ்' திரைப்படத்திற்காகத் தனது சக நடிகை மார்கெட்டா இர்க்லோவாவுடன் இணைந்து இவர் எழுதிப் பாடிய "ஃபாலிங் ஸ்லோலி"  என்ற பாடல் உலகப் புகழ்பெற்றது. இந்தப் பாடலுக்காக 2008-ம் ஆண்டு அவருக்குச் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

'ஒன்ஸ்' திரைப்படத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிராட்வே இசை நாடகம் 8 டோனி விருதுகளைக் வென்றது. மேலும், இவரது "டிட்ன்ட் ஹி ராம்பிள்" இசை ஆல்பம் மதிப்புமிக்க கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

பாடகர் க்ளென்

கிளென் ஹான்சார்டின் மறைவுக்குப் புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், அயர்லாந்து ஜனாதிபதி கேத்தரின் கொனோலி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் உள்ளிட்ட பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

சிறந்த இசைக்கலைஞராக மட்டுமின்றி, தன் வாழ்நாள் முழுவதும் வீடற்றோரின் நலனுக்காகவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்காகவும் தீவிரமாகக் குரல்கொடுத்து வந்தவர் என அயர்லாந்து தலைவர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். மறைந்த கிளென் ஹான்சார்டுக்கு அவரது மனைவியும் பின்லாந்து கவிஞருமான மைரே சாரிட்சா மற்றும் 3 வயது மகன் கிறிஸ்டி ஆகியோர் உள்ளனர்.