1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில்... தமிழகத்தில் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் முழுவதும் பல்வேறு இந்து அமைப்பினரும் பக்தர்களும் விநாயகர் சிலைகளை நிறுவிச் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். பண்டிகையை நல்ல முறையில் நடத்த ஏதுவாக, தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் சுமார் 20,000 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தக் கூடுதலாக 2,000 போலீசார் களமிறக்கப்பட்டு, நகரில் புதிதாக 14 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அரியவகை ஆமைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பட்டினப்பாக்கம் மற்றும் பனையூர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
